ஏப்ரல் 2023 செய்திமடல்
இதழ் 14, தொகுப்பு 4
இந்த மாதம் Keystone உண்டாக்கிய தாக்கம்

கிருஷ்ணபுதூரில் குழந்தைகளுடன் மன நலம்பற்றிய உரையாடல்
சமூக நலன்
ஏப்ரல் 2 அன்று, நம் சமூக நலன் குழுவினர் கிருஷ்ணபுதூரில் 21 குழந்தைகளைச் சந்தித்தார்கள், மன நலன்பற்றிய உரையாடல்களை ஊக்குவித்தார்கள். ஓவியங்கள், புதிர்களின் வழியாகக் குழந்தைகள் மன நலன் சார்ந்த சொற்களைப் புரிந்துகொண்டு பயன்படுத்தத் தொடங்கினார்கள். குழந்தைகளை ஒருங்கிணைத்து விவாதங்களை வழிநடத்துவதற்குக் காலநிலைக் கல்வியாளர்கள் மணிமேகலை மற்றும் பொன்னம்மா இருவரும் உதவினார்கள். இதைத் தொடர்ந்து, பெரியவர்களுடனும் உரையாடவேண்டும், மன நல அறிவில் உள்ள இடைவெளிகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று இந்தக் குழு விரும்புகிறது.
இதுபற்றி மேலும் அறிய, இந்த வலைப்பதிவைப் படியுங்கள்.

காலநிலை அறிவார்ந்த பள்ளிகளில் கல்வி: ஒரு மறுசிந்தனை
காலநிலை மாற்றம்
ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில், கோத்தகிரி, சிகுர் மற்றும் நீலாம்பூரைச் சேர்ந்த காலநிலை அறிவார்ந்த பள்ளிக் கல்வியாளர்கள் எட்டு பேர் இரண்டு நாள் பயிலகம் ஒன்றில் பங்கேற்றார்கள். இந்தப் பயிலகத்தின்போது, முந்தைய சில மாதங்களில் பள்ளிகளில் நடந்துள்ள முன்னேற்றங்களைப்பற்றி விவாதிக்கப்பட்டது, பாடத் திட்டங்கள், செயல்பாட்டுத் தாள்கள், பிற பொருட்கள் மறு ஆய்வு செய்யப்பட்டன. எங்கள் உயிரியல் பன்முகத்தன்மைக் குழுவினர் சூழியல் மறுசீரமைப்பைப்பற்றியும், காலநிலை நெருக்கடியைத் தணிப்பதில் அதன் பங்குபற்றியும் ஓர் அமர்வை நடத்தினார்கள்.
இதுபற்றி மேலும் அறிய, இந்த வலைப்பதிவைப் படியுங்கள்.

பழங்குடியினத் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இதழியல் பயிலகங்கள்
கோத்தகிரி வானொலி
ஏப்ரல் 6 அன்று, நீலகிரி சீமை சுதி என்னும் உள்ளூர்ச் செய்திமடலின் தன்னார்வலர்களுக்கும், பழங்குடியின இளைஞர் தலைமைத் திட்டத்தின் கற்பிக்கும் தோழர்களுக்கும் செய்தி அறிக்கையிடல் பயிலகம் ஒன்றை நாங்கள் நடத்தினோம். இதில் கலந்துகொண்டவர்கள் தங்களுடைய எழுதும் பாணிகளைப்பற்றியும் செய்திகளைப் பதிவுசெய்யும் திறனைப்பற்றியும் சிந்திக்க இந்த நிகழ்வுகள் உதவின. கோயம்பத்தூரைச் சேர்ந்த பதிப்பித்தல் நிறுவனமாகிய கதை வட்டத்தின் மூத்த இதழாளர் வேலாயுதம் இந்த நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இதுபற்றி மேலும் அறிய, இந்த வலைப்பதிவைப் படியுங்கள்.
பார்க்கவேண்டியவை
குறும்படம்: நீலகிரி மலைகளின் நீர் & ஈர நிலங்கள்
உயிரியல் பன்முகத்தன்மை பாதுகாப்பு & நீர் மற்றும் தூய்மை
HCL அறக்கட்டளை ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட இந்த குறும்படம், தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் நீர்ப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் Keystoneன் பணியைப்பற்றிய அறிமுகத்தை வழங்குகிறது. இந்த மாநிலத்தின் ‘நீர்க் கோபுரம்’ என்று அறியப்படும் நீலகிரி மலைகள் முக்கியமான ஈரநிலங்கள், மற்ற நீர்நிலைகளைக் கொண்டுள்ளன, இவை லட்சக்கணக்கானோருக்கு நீரைக் கொண்டுவருகின்றன.
Keystone x ERA இந்தியா
இந்தியச் சூழியல் மறுசீரமைப்பு கூட்டணி அமைப்பு, Keystone பணியாளர்கள் தங்களுடைய பணியைப்பற்றி எழுதிய கட்டுரைகளைப் பதிப்பிக்கிறது.

நீலகிரியில் உள்ளூர்த் தாவர நர்சரிகள்: நிர்வகிப்பதில் உள்ள எதார்த்தச் சூழ்நிலை மற்றும் சவால்கள்
எழுதியவர்: ஹர்ஷவர்தினி அங்கப்பன்
இந்தப் பேட்டியில், மறுசீரமைப்பு முறைகளைப் பின்பற்றுவோர், உள்ளூர்ச் சமூக உறுப்பினர்களான சிவண்ணா மற்றும் அரத்குட்டனுடன் பேசுகிறார் உயிரியல் பன்முகத்தன்மைக் குழுவின் சூழியல் மறுசீரமைப்புத் திட்டங்களில் பணியாற்றும் ஹர்ஷா. இவர் தன்னுடைய சொந்தப் பணியைப்பற்றிச் சிந்தித்தபடி, நீலகிரியில் உள்ளூர்த் தாவரங்களை வளர்த்தல் மற்றும் இயற்கை நிலையை மீட்டல் தொடர்பான அவர்களுடைய பயணத்தைப்பற்றிக் கற்றுக்கொள்கிறார்.

காட்டு உணவு நர்சரிகள் மற்றும் மேற்கு வங்காளத்தின் கேரியா சாபர் சமூகம்
எழுதியவர்: ரோகன் முகர்ஜி
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள போட்கா-வில் இருக்கும் எங்கள் அலுவலகத்திலிருந்து பணியாற்றும் ரோகன் மைய மற்றும் கிழக்கு இந்திய நிலப்பரப்புகளில் காட்டு உணவு நர்சரிகளைப்பற்றி எழுதுகிறார். முன்பு காட்டு உணவுகளை உண்டு செழித்த, இப்போது நர்சரிகளை வளர்க்கக் கற்றுக்கொள்கிற, தொழில்முறை விவசாயம் ஆதிக்கம் செலுத்துகிற மாறுகின்ற உலகத்துக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக்கொள்கிற ஒரு நாடோடிச் சமூகத்தின் பார்வையை இவர் பதிவுசெய்கிறார்.
சத்தியமங்கலத்திலிருந்து சமூகக் கதைகள்

இந்தத் தொடரில், எங்கள் சமூக வல்லுனர் விஜயன் C. R. சத்தியமங்கலத்தில் உள்ள உள்ளூர்ச் சமூக உறுப்பினர்களை பேட்டி கண்டு, அவர்களுடைய அன்றாட வாழ்க்கையைப்பற்றிய உண்மைக் கதைகளை எழுதுகிறார்.
தமிழ் நாட்டிலுள்ள நாகலூரில் வசிப்பவர் வேலுசாமி. இவர் தன்னுடைய ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதன்மூலமும், உள்ளூர்த் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் பண்பாட்டு இசையை இசைப்பதன்மூலமும் பிழைக்கிறார். இந்த ஆண்டு வேலுசாமி அறுவடை செய்துள்ள பயிர்களைப்பற்றி, அவருக்கு விருப்பமான உள்ளூர்ச் சுவை உணவுகளைப்பற்றி, அவருடைய கிராமத்தின் பண்பாட்டுக் கைவினைக் கலைகளைப்பற்றி, முதன்மையாக, பண்பாட்டு இசைக் கலைஞராக அவருடைய திறமையை உள்ளூர் மக்கள் எப்படி விரும்புகிறார்கள் என்பதுபற்றியெல்லாம் வேலுசாமியுடன் பேசுகிறார் விஜயன்.
நிகழ்ச்சிகள்

ஆதிமலை புதிய உற்பத்தி மையத்தைத் திறக்கிறது ஏப்ரல் 3 ஆம் தேதி, எங்கள் கூட்டு உற்பத்தியாளர் தலைமையிலான நிறுவனமான ஆதிமலை, பத்து ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. மற்றும் பனகுடி கிராமத்தில் தேன், தேன் மெழுகு உறைகள் மற்றும் பலவற்றை உற்பத்தி செய்வதற்கு வசதியாக ஒரு புதிய உற்பத்தி மையத்தைத் திறந்து வைத்தது.

அரெப்பாளையத்தில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் திறக்கப்பட்டது
ஏப்ரல் 20 அன்று, எங்கள் சத்தியமங்கலம் குழு அரெப்பாளையத்தில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஒன்றைத் திறந்துவைத்தது. உள்ளூர்ச் சமூகத்தினருக்குக் காட்டு மற்றும் புல்வெளிச் சூழியல்பற்றியும் இன்னும் பலவற்றையும் கற்றுத்தரும் அருங்காட்சியகம் இது. இந்த ஆண்டு Keystone தொடங்கியுள்ள இரண்டாவது அருங்காட்சியகம் இதுவாகும்!

நீலகிரி அறக்கட்டளை பொறிவரை பயிலரங்கத்தை தொடங்கியுள்ளது
ஏப்ரல் 21 அன்று, எங்கள் கூட்டாளர் TNF பொறிவரையில் ஒரு சமூக வானொலி நிலையத்திற்கு ஒரு புதிய பணியிடத்தைத் திறந்து வைத்தது. மற்றும் அங்கு தேனீ வளர்ப்பு, இறை தேடுவது, இயற்கை விவசாயம், கைவினைப்பொருட்கள் மற்றும் கலைப்படைப்பு போன்ற பாரம்பரிய இருளா நடைமுறைகளை மேம்படுத்துகிறது.

பண்பாட்டுச் சிறுதானியக் கண்காட்சி
ஏப்ரல் 25 அன்று, நீலகிரியில் உள்ள Keystone வளாகத்தில் நடைபெற்ற, பண்பாட்டுச் சிறுதானிய விவசாயத்தின் வரலாறு, விவசாயச் சூழியல் மற்றும் பண்பாட்டுக் கண்காட்சியில் கலந்துகொள்ள ஜெர்மனியைச் சேர்ந்த ரோசா லக்ஸம்பர்க் ஸ்டிஃடங் அவர்களை அழைத்தது எங்கள் மக்கள் & இயற்கைத் தொகுப்புக் குழு.